Friday, May 16, 2008

நான் அறிவது ஒன்றும் இல்லை நீயே எல்லாம் (பாடல் 95)


நன்றே வருகினும் தீதே விளைகினும் நான் அறிவது
ஒன்றேயும் இல்லை உனக்கே பரம் எனக்கு உள்ளதெல்லாம்
அன்றே உனது என்று அளித்து விட்டேன் அழியாத குணக்
குன்றே அருட்கடலே இமவான் பெற்ற கோமளமே


நன்றே வருகினும் - எனக்கு நன்மைகளே விளைந்தாலும்

தீதே விளைகினும் - தீமைகளே விளைந்தாலும்

நான் அறிவது ஒன்றேயும் இல்லை - நன்மை தீமை என்று நான் பிரித்து அறிவது ஒன்றுமே இல்லை

உனக்கே பரம் - உனக்கே அது தெரியும்; உனக்கே அடைக்கலம்.

எனக்கு உள்ளதெல்லாம் - என்னுடையது என்று இருப்பவற்றை எல்லாம்

அன்றே உனது என்று அளித்து விட்டேன் - எப்போதோ உன்னுடைய உடைமை என்று கொடுத்து விட்டேன்.

அழியாத குணக்குன்றே - என்றுமே மறையாத நற்குணங்களின் குன்றே

அருட்கடலே - அந்த நற்குணங்களிலேயே சிறந்ததான அருளின் கடலே


இமவான் பெற்ற கோமளமே - இமயமலைக்கரசன் பெற்ற மென்மையானவளே.

அபிராமி அன்னையே! நானும் என் உடைமைகளும் உனக்கே அடைக்கலம் என்று என்றைக்கோ கொடுத்துவிட்டேன். இனி மேல் எனக்கு நன்மைகளே வந்தாலும் தீமைகளே வந்தாலும் நான் அவற்றைப் பிரித்து அறிய மாட்டேன். அவை அனைத்துமே உன் அருளால் வருவதால் எல்லாமே எனக்கு நன்மையாகத் தான் இருக்க வேண்டும். அவற்றைப் பிரித்துப் பார்த்து நடத்திக் கொள்வதெல்லாம் உன் பரம்; உன் கடமை. அன்பு, அறிவு, அருள் போன்ற நற்குணங்களின் குன்றே. அவற்றுள்ளும் சிறந்த அருளின் கடலே. மலைமகளே.

***

அந்தாதித் தொடை: சென்ற பாடல் நன்றே என்று நிறைய இந்தப் பாடல் நன்றே என்று தொடங்கியது. இந்தப் பாடல் கோமளமே என்று நிறைய அடுத்தப் பாடல் கோமளவல்லியை என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல் அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை.

எதுகை: நன்றே, ஒன்றேயும், அன்றே, குன்றே

மோனை: நன்றே - நான், ஒன்றேயும் - உனக்கே - உள்ளம், அன்றே - அளித்துவிட்டேன் - அழியாத, குன்றே - கோமளமே.

4 comments:

said...

குமரா. இவ்ளோ வேகமா எழுதறீங்களே. முடியப் போகுதுன்னு நினைச்சா கவலையா இருக்கு. ஹ்ம்.. எல்லாம் அவள் அருள். அவள் விருப்பம்.

எப்போதும் போல அழகான விளக்கம். நன்மை வந்தாலும் தீமை வந்தாலும் பிரித்து அறியாத நிலையை அவளே அருளட்டும். அன்னையின் திருவடிகள் சரணம் சரணம்.

said...

அபிராமி அந்தாதி நிறைவு பெற்றால் என்ன கவிநயா அக்கா. தொடங்கிவிட்டுத் தொடராமல் நிறைய பதிவுகள் இருக்கின்றனவே. அவற்றில் தொடர்ந்து பக்தித்தமிழைப்/சமயத் தமிழைப் பார்க்கலாம்.

said...

இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் 'அனைத்தையும் துறக்கும் மனதிலை பெறலாம்'.

said...

எனக்கு என்று உள்ளதெல்லாம் உனக்கே அளித்துவிட்டேன் என்று சொல்வதால் 'அனைத்தையும் துறக்கும் மன‍‍ நிலை பெறலாம்' என்ற பயன் மிகப் பொருத்தமே. நன்றிகள் சிவமுருகன்.