Friday, May 16, 2008

அபிராமி சமயம் நன்றே (பாடல் 94)


விரும்பித் தொழும் அடியார் விழி நீர் மல்கி மெய் புளகம்
அரும்பித் ததும்பிய ஆனந்தம் ஆகி அறிவு இழந்து
கரும்பின் களித்து மொழி தடுமாறி முன் சொன்ன எல்லாம்
தரும்பித்தர் ஆவர் என்றால் அபிராமி சமயம் நன்றே


விரும்பித் தொழும் அடியார் - அபிராமி அன்னையை விரும்பித் தொழும் அடியவர்கள்


விழி நீர் மல்கி - கண்களில் கண்ணீர் மல்கி


மெய் புளகம் அரும்பி - மெய் சிலிர்த்து


ததும்பிய ஆனந்தம் ஆகி - மகிழ்ச்சி பெருகித் ததும்பி


அறிவு இழந்து - அறிவு மயக்கம் உற்று


கரும்பின் களித்து - இனிய கரும்பினை உண்டது போல் களித்து


மொழி தடுமாறி - சொற்கள் தடுமாறி


முன் சொன்ன எல்லாம் தரும் பித்தர் ஆவர் என்றால் - இப்படி இங்கே முன்னர் சொல்லப்பட்டவை எல்லாம் பெறும் பித்தரைப் போல் ஆகிவிடுவார்கள் என்றால்


அபிராமி சமயம் நன்றே - அபிராமியை வணங்கும் இந்தச் சமயத்துறை மிக நன்றே.

அபிராமி அன்னையை வணங்கும் அடியார்களுக்கு ஏற்படும் மெய்யுணர்வுகளைப் பற்றி இங்கே சொல்கிறார் பட்டர். கண்ணீர் மல்கி, மெய் சிலிர்த்து, மகிழ்ச்சி பெருகி, அறிவிழந்தவர் போல் சொற்குழறி பித்தரைப் போல் அன்னையின் மேல் அன்பு பெருகி வணங்குவது அடியார்களின் பக்திக்கு அடையாளங்கள்.

***

அந்தாதித் தொடை: சென்ற பாடல் விரும்புவதே என்று நிறைய இந்தப் பாடல் விரும்பி என்று தொடங்கியது. இந்தப் பாடல் நன்றே என்று நிறைய அடுத்தப் பாடல் நன்றே என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல் அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை.

எதுகை: விரும்பி, அரும்பி, கரும்பின், தரும்பித்தர்

மோனை: விரும்பி - விழிநீர், அரும்பி - ஆனந்தம் - ஆகி - அறிவு, கரும்பின் - களித்து, தரும் - சமயம்.

5 comments:

said...

எனக்கு ரொம்ப ரொம்பப் பிடித்த பாடல். அன்னையிடம் அவ்வளவு அன்பு வைக்க எவ்வளவு கொடுத்து வைத்திருக்க வேண்டும்!

said...

உண்மை தான் அக்கா. எளிதில் கிடைக்காத நிலை தான் இது.

said...

இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் 'பைத்தியம் தெளியும்'.

said...

இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் 'பைத்தியம் தெளியும்'.

said...

அன்னையின் திருப்பெயர்களைச் சொல்லும் பித்தர் ஆவர் என்றால் அது நன்றே என்று சொன்னதால் இந்தப் பாடலைப் பாராயணம் செய்தால் பித்தம் தெளியும் என்ற பயன் பொருத்தம். நன்றிகள் சிவமுருகன்.